திடீரென்று ஊருக்கு போகிற வழியில,
தான் பார்த்த காடுகளையும், மலைகளையும் இஷ்டத்துக்கு சுத்த ஆரம்பிச்சது.
அருவிகளையும், ஓடைகளையும் விடவில்லை.
மூச்சுத்திணற திணற ஒரு வாரம் சுத்தியாச்சி.
கஷ்டப்பட்டு புகைப்படங்களும் எடுத்தாச்சு.
உங்களோட பகிர்ந்துக்காம இருக்கிறது ஒரு சந்தோஷமா ???
கண்ணா...கொஞ்சம் கீழே பார்.....
கொடை நாடு மலை - தேனி
கொடை நாடு - ஆலயம்
மேலும் படங்கள் காண....
http://pisaasukutty.blogspot.com/p/blog-page.html
கடந்து வந்த பாதை . . . ( காணொளி )
கொடை மலை , அருவி, மலை என்று சுற்றித்திரிந்த எங்களுக்கு இறுதியாக கண்ணில் பட்டது ஒரு மலை நகரம். குளிரும், சில்லென்ற காற்றும் மயக்கி அந்நகரத்துக்குள் அழைத்துச் சென்றுக்கொண்டிருந்தது . சற்றே சாலையை விட்டு விலகி காட்டுப் பாதையை தேர்ந்தெடுத்து உள்நுழைந்தால் சிறிது தூரத்திற்கெல்லாம் வரவேற்கிறது நீரோடை. அடடா ... கோடி ரூபாய் கொடுத்து செயற்கை நீர்வீழ்ச்சிகள் அமைத்தாலும் கிடைக்காது அவ் நீரோடைகள். உருகி பெருக்கெடுத்து ஓடும் பாதரசத்தை போலிருந்தது சிற்றோடைகள். அவைகளை தாண்டி சென்றால் கம்பீரமாய் காத்திருந்தது மலையருவிகள்... எவ்வளோ முயற்சித்தும், உள்ளம் நனைய வாய்ப்பளிக்கவில்லை அவைகள். கிட்டத்தட்ட 3500 அடி உயரத்திலிருந்து விழும் அருவியினை அடைய அனுமதி மறுக்கப்பட்டதும் ஓர் காரணம்.
மலைவாசியாகி விடலாமென்றெண்ணி யாருமே நுழைய முடியாத ஓர் புதரடைந்த கரடுமுரடான பாதையை தேர்ந்தெடுத்தோம். அப்பப்பா.... எவ்வளவு அருவிகள், ஓடைகள். சாதாரண சுற்றுலாப் பயணிகளுக்கேல்லாம் இவை தென்பட நிச்சயம் வாய்ப்பில்லை. காரணம், நாங்கள் சென்றது சுற்றுலாயில்லை. கிட்டத்தட்ட ஓர் சாகசப் பயணம்.
அந்நகரம் ........ 1845 ல் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட ' மலைகளின் இளவரசி '....... கொடைக்கானல். நகரத்திற்குள் இருந்ததென்னவோ சில மணி நேரங்கள் தான். பெரும்பாலான நேரம் ஜீப் பயணமும், நடப்பதும் தான் .
சற்று நேரம் சுற்றுலாவாசியாக மாறி , சில பகுதிகளை பார்த்தேன்.
' டால்பின் நோஸ் ' என்றழைக்கப்படும் பகுதிக்கு சென்றோம்.
* ஊருக்குள் பத்து பேரை அடித்துவிட்டு தாதாவென்று சுற்றிக்கொண்டிருந்தவனேல்லாம் அதன் நுனிக்கு செல்ல பயந்தான்.
* ஜீப் பயணத்திலிருந்து கிட்டத்தட்ட 2 கி.மீ. சறுக்கலான நடைபாதை பயணத்தில் அமைந்திருந்தது அப்பகுதி. வேக வேகமாக சென்றாலும், திரும்பி வரும்போதுதான் அனுபவித்து வந்தோம்.
சில கி.மீ. கடந்தபின் சோர்வடைந்து வழிகளில் அமைந்திருந்த சிறிய மர பெஞ்சுகளில் அமர்ந்து ஓய்வெடுத்து சூடான காபியும், லெமன் சோடாவும் ( ஓசியில் ! ) குடித்து தெம்பாகி நடையை தொடர்ந்தது அருமையாக இருந்தது.
* இடையே ஊர் மக்களை பேட்டிக்கண்டபோது (அதான் நம்ப தொழிலாச்சே ! ) கேட்டறிந்த சில விஷயங்கள்.
* 'இராம் ' திரைப்படத்தில் ஜீவா ஒற்றைக்காலோடு பாறையில் நிற்கும் காட்சி இங்கேதான் படமாக்கப்பட்டது. ( எப்படித்தான் படமெடுத்தாங்களோ ! )
* ' Echo Rock ' என்னும் பகுதியில் இருந்து ஒரு கல்லை உருட்டி விட்டால், அந்தக் கல் கிட்டத்தட்ட தரையை அடைய சுமார் 20 நிமிடங்கள் ஆகுமாம். அது அப்பகுதி மக்களுக்கு மட்டுமே தெரிந்த விடயம். இதற்காகவே அப்பகுதி சிறுவர்கள் அடிக்கடி கல்லை உருட்டி விடும் வேலைகளும் நடந்தன.
* ' Suicide Point ' பகுதியில் தற்கொலை செய்துக்கொண்டவர்களின் எண்ணிக்கை கணக்கிட முடியாதது. இத்தனை வருடங்களில் ஒரே ஒருவர் மட்டும் உயிர் பிழைத்திருக்கிறார். மேலிருந்து குதித்த ஐந்தாம் நாளில், பிணம் தேடி சென்றவர்கள் கால் உடைந்த நிலையில் அவரை கண்டுபிடித்திருக்கிறார்கள்.
* இறுதியாக ஒரு காட்டெருமை வழிமறித்தது என்னை மட்டும். தப்பித்து சென்றபின் அது ஒரு கன்றுக்குட்டித்தான் . தடவிக்கொடுத்துட்டு வந்திருக்கலாமே என கிராம மக்கள் சொன்னது வியப்பு ! ( கொய்யால.... 5 அடி இருக்கும்...! ) .
* காட்டெருமையை கண்டு எள்ளளவும் பயமில்லை அவ்வூர் பெண்களுக்கு. ஏதோ கன்னுக்குட்டி மேய்வதை காண்பதுபோல் அதை வேடிக்கை பார்த்து சென்றது எனக்கு செம ' காண்டாக ' இருந்தது.
* ' லெமன் சோடா ' பருகிய கடையிலிருந்த அம்மா எங்களை வரவேற்றது , நினைவில் அழியாதது. கதைகள் சொன்னதுடன், அன்புடன் உபசரித்தது மிக அருமை. அன்புடன் நான் இரசித்த பூக்களை, கை நிறைய நறுக்கி கொடுத்தார். பின்புதான் தெரிந்தது அவர் ' பூக்கூடை ' தயாரிக்க உபயோகிக்கும் பூக்கள் அவை என்று. சுமார் 100 ரூபாய் மதிப்பிருக்கும் பூக்களை தயக்கமின்றி வெட்டி கைகளில் திணித்தபோது என் இதயம் கனமாகியிருந்தது. காரணம், அச்செடிகளில் வேறு பூக்களே இல்லை. அவரை பிரியும்போதுஎங்கள் இருவரின் மனதிலும் அழுத்தம்.
* ' வெள்ளக்கவி ' என்னும் ஊர் அங்கிருந்து ' 7 கி.மீ. ' தூரத்தில் இருக்கிறது. ஊருக்கு செல்ல ஒரே ஒரு ஒத்தையடி பாதைதான் . இறக்கமான பாதையின் வேகத்தில், 45 நிமிடத்தில் நடந்து சென்று விடலாம். சுமார் 2000 பேர் இருக்கும் ஊரில், மருத்துவ வசதி கிடையாது. கொடைக்கானல்தான் செல்ல வேண்டும்.
இரவு 11 மணிக்கும் ஊருக்கு நடந்து செல்கிறார்கள் .
* அப்பகுதியில் இருந்து பார்த்தால் இரண்டு சிற்றூர்கள் தெரியும். ' சின்னூர் ' 'பெரியூர் '... ' பிதாமகன் ' திரைப்படம் படமெடுக்கப்பட்ட ஊர். ( எப்படித்தான் Location தேடிப் பிடிக்கறாங்களோ ! ). ஊருக்கு செல்ல சாலை வசதி கிடையாது.
நடந்துதான் செல்ல முடியும். போடியிலிருந்து செல்ல கிட்டத்தட்ட 3 மணி நேரமாகும். மின் வசதியெல்லாம் உண்டு. அருமையான அமைதியான ஊர்.
* ' கணேசபுரம் ' காட்டுப்பகுதியில் பள்ளிக்கூடம் ஒன்றைக் கண்டதும் ஆச்சரியம் . அட்டைப்பூச்சிகளின் ஆதிக்கம் இருந்தது. சரியான காட்டு வழிப் பயணம்.
* சுற்றுலாவும், கட்டுமானப் பணிகளும் , பேரிக்காய் தோட்டமும்தான் பிரதான வருமானம் கொடைக்கானல் மக்களுக்கு. சுற்றுலா பணிகளில் சொல்லப்போனால் ' கொள்ளை ' லாபம் அடிக்கிறார்கள். சரியான பணம் புழங்குவது இதில்தான். ஒன்றுமேஇல்லாத விஷயத்துக்கு கூட பணம் பார்த்துவிடுவார்கள். கொடைக்கானலையே இவர்கள்தான் கண்டுபிடித்தது போல இருக்கும் கைடுகளின் செய்கை. எல்லாவற்றையும் ' பக்காவா ' பண்ணித்தரேன் என்று சொல்வதை நம்பி இவர்கள் பின்சென்றால் உங்கள் ' பர்ஸ் ' இளைத்து , கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் பரிதாபமாக நிற்க வேண்டி வரும். ஒவ்வொரு விஷயத்தையும் விலாவாரியாக விசாரித்து நடந்தால் நீங்கள் ' கெட்டி '. இனிய நினைவாக பயணம் அமையும்.
* இரண்டே இரண்டு துண்டு எக் பிரட் விலை..... ' 25 ரூபாய் ' . கொஞ்சம் நல்ல சாப்பாடு சாப்பிட வேண்டுமா ??? மதிய உணவின் விலை ரூபாய் 90. குறைந்த விலையில், தரமான உணவகத்தை தேர்ந்தெடுப்பது உங்கள் சாமர்த்தியம். உங்கள் கைடு நல்லவராயிருக்கும் பட்சத்தில் இன்னும் சாத்தியம்.
* முடிந்தவரை உங்கள் டிரைவர், கைடு, பயண பாதுகாவலர் என உங்களுடன் வரும் அச்ஜீவனை பயணத்தின் துவக்கத்திலிருந்தே உற்சாகமே வைத்துக்கொள்ளுங்கள். சில பல ரூபாய் தாட்களை ஆரம்பத்திலேயே பாக்கெட்டில் திணியுங்கள். பயணம் முடியும் தருவாயில் அவர்களின் குடும்பம், வாழ்க்கை , பணியைப் பற்றி கேளுங்கள் . சுவராசியமாகவும்,
அவர்கள் வாழ்வின் கடினப்பகுதிகளும் உங்களுக்கு தெரிய வரும். நீங்கள் அவர்களுக்காக காட்டும் அக்கறையில் உள்ளம் நெகிழ்வார். அது அவருக்கு அவருக்கு கொடுத்த ஊதியத்தை காட்டிலும் நீங்கள் கொடுக்கும் வெகுமதி.
* இவ்வளவு சொல்றேனே நான் என்ன பண்ணேன் தெரியுமா ??? 30 நிமிடமாய் கவனித்துக்கொண்டிருந்தேன். எங்களை கவனிப்பதில் மும்முரமாய் இருந்த அச்சிறுவனை. 17 வயதிருக்கும்.
அனைவரும் உணவருந்திவிட்டு இரவு பொழுதை மொட்டைமாடியில் செலவிட்டுக்கொண்டிருந்தபோது, என்னிடம் தனியே சிக்கினான் அவன்.
நெசவுத் தொழில் பொய்க்க குடும்பத்தைவிட்டு பணிக்காக கொடைக்கானலில் அக்குடிசையில் ( COTTAGE தான Engleesla ? ) வேலை பார்த்துக்கொண்டிருந்தான்.
பாலிடெக்னிக் முடித்திருந்தான். விலாவரியாக சொல்லாவிட்டாலும் அவர் வார்த்தைகளில் அவன் கதையின் வலி தெரிந்தது. பணி சூழல் அவனை சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும்.
விடிந்ததும் சோதனையாக ஹீட்டர் வேலை செய்யாதபோது கஷ்டப்படாத மாதிரி பல பக்கெட்டுகளில் சுடுத்தண்ணி கொண்டு வந்து நிரப்பினான். எப்போது தூங்கினான், எப்போது எழுந்தான் ?
கேட்க மறந்துவிட்டேன் நானும். முன்னிரவே கேட்டிருந்தேன், எப்ப தான் தூங்குவ ??? ... அவனிடம் பதிலில்லை. அநேகமாக நீங்கள் உறங்கியதும் என்பது அவன் பதிலாக இருந்திருக்க வேண்டும்
என்பது என் யூகம். நாங்கள் வாகனத்தில் ஏறி பயணத்தை துவங்கும் போது, அவன் முகத்தில் சிறிய மகிச்ஹ்சி தெரிந்தது. உடன் அவனைவிட சற்று மூத்த ஒரு நண்பர் இருந்தது தான் காரணம் என்று எனக்கு புலப்பட்டது. மிதிவண்டியின் சக்கரம் போல் சென்றுக்கொண்டிருந்தது அவன் வாழ்க்கை.
* சரி,,,, நிகழ் காலத்திற்கு வருவோம். கொடைக்கானலில் சுற்றுலாதான் பிரதானம் என்பதாலோ என்னவோ, மக்களின் உபசரிப்பு மிக அருமையாக இருக்கும். நாம் முறைத்துக்கொள்ளாதவரை, அனைவரும் இனியவர்கள்
தான். அவர்களுக்கு சுற்றுலாதான் பிழைப்பு என்பதால் உங்கள் பணத்தில் குறியாக இருப்பார்கள். ' மானிடவியலின் ' படி.... இதில் தவறேதுமில்லை. !!
* ' ஜோடியாக ' செல்கிறீர்களா ??? நல்ல பயண ஏற்பாட்டுடன் செல்வது நல்லது. அதைவிட, கொஞ்சம் அதிக பணத்துடன் செல்வது ரொம்ப நல்லது.
* ஊரை விட்டு விலக விலக அனைத்துப் பொருட்களின் விலைகளும் சற்று அதிகரிக்கு,ம். தவறில்லை... மலைப்பாதையில் உங்களுக்காக கடைத் திறந்து வைத்திருக்கும் அவர்களும்
பாவமில்லையா ??
* ' சாமர்த்தியமாக ' நடந்துக்கொண்டால் நல்ல பயணம் நிச்சயம்.
* நிறைய பேர் மழைப் பாதையில் கடை வைத்திருக்கின்றனர். பெரும்பாலான பொருட்கள் கிடைக்கின்றன. விலை சற்று அதிகம் அவ்வளவே . 6 மணிக்கெல்லாம் சிலர் கடைகளை அடைத்துவிடுகின்றனர்.
நல்ல உபசரிப்பு உண்டு. மாற பெஞ்சில் அமர்ந்து சூடாக, குளிருடன் காபி குடிப்பது நன்றாக இருக்கும் .
* அவர்களின் சின்னக் குழந்தைகள் கூட தினமும் 2,3 கி.மீ. நடந்துதான்
பள்ளி சென்று வருகிறார்கள்.
* அருகில் நிறைய பேரிக்காய் எஸ்டேட்டுகள் உண்டு. பார்த்தால் தெரியாது. இவைகளில் , இவைகளால் காட்டெருமைகள் , காட்டு விலங்குகளின் நடமாட்டங்கள் உண்டு.
* ஏதாவது குறையிருக்கிறதா என்று கேட்டால் , இந்த மாதம் மழை பெய்கிற மாதம். என்னவோ சாமி விட்டுவெச்சிருக்கு. என்று பதில் சொல்லி ஆச்சர்யப்படவைக்கிறார்கள் .
ஒரு புலம்பல் கிடையாது, குறை கிடையாது.
* திடீரென்று சூறாவளி வீசும். மரங்களிருப்பதால் அநேக பாதிப்பில்லை. வீட்டுக்கூரையின் இருபுறமும், கனமாக செங்கற்களால் பிடிமானம் ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
* ஊட்டிக்கும், கொடைக்கானலுக்கும் இருக்கும் வித்தியாசத்தை காணும் முன், ஊட்டியைவிட இங்கு நிலச்சரிவு மரங்கள் மிகவும் குறைவு.
காரணம் மரங்கள்.. 500 அடிக்கும் மேல் மண்ணுக்குள் செல்லும் இம்மரங்களின் வேர்களால் மண்ணில் பிடிமானம் ஏற்பட்டு , மண்சரிவு ஏற்படுவதில்லை. எங்கு பார்த்தாலும் மரங்களை காணலாம்.
* எங்களுக்கு ஆச்சரியமாக இருந்த அம்மக்களின் வாழ்க்கை அனுபவங்கள் , அவர்களுக்கு பழகிவிட்ட ஒன்று.
இவர்கள், கிட்டத்தட்ட ' SURVIVAL of the FITTEST ' என்னும் டார்வினின் தத்துவத்துக்கு சரியான உதாரணம் .
~ குட்டி ~